தமிழர் வாழ்வியல் பயணம்

இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை, இந்திய வரலாற்றின் துவக்கம் வேதகாலம், அதாவது ஆரியர்கள் வருகையில் இருந்து என்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. அதுவரை வரலாற்றை எழுதிய அறிஞர்கள் இலக்கியம், கல்வெட்டு, நினைவுக் குறிப்புகளை ஆதாரமாக வைத்தே எழுதினர். இந்த நிலை அகழ்வாராய்ச்சி முடிவுகளால் மாற்றி அமைக்கப்பட்டது. ஜான் மார்ஷல் தலைமையிலான அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் வரலாற்று அறிஞர்களுக்கு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது. வேத காலத்திற்கு முன்பே ஆரியப் பண்பாட்டில் இருந்து வேறுபட்ட உயர்ந்த நகர நாகரிகம் இருந்துள்ளது என முடிவுக்கு வந்தன. இது பல கேள்விகளை அவர்களுக்குள் எழுப்பினர்

  1. வேத காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள் யார்?
  2. அவர்கள் எங்கிருந்து எங்கு விரட்டியடிக்கப்பட்டனர்?
  3. அவர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான காரணம்?

இந்த கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் அறிஞர்கள்.

இந்திய வரலாற்றைப் போலவே தமிழக வரலாற்றையும் இலக்கியங்களை மையப்படுத்தி, அவற்றின் துவக்கம் சங்க காலம் அதாவது கிமு 300 என்று கணித்தனர். ஆனால் தற்போதைய தொடர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழக வரலாற்றை மேலும் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.

  • 1968 – கொற்கை, தூத்துக்குடி
  • 1969 – வசவசமுத்திரம், காஞ்சிபுரம்
  • 1973 – கரூர்
  • 1979 – பனையங்குளம், தர்மபுரி
  • 1980 – தொண்டி, ராமநாதபுரம்
  • 1986 – அழகன்குளம், ராமநாதபுரம்
  • 1992 – திருக்கோவிலூர், விழுப்புரம்
  • 1994 – பூம்புகார், நாகப்பட்டினம்
  • 1999 – மலிகைமெடு, கடலூர்
  • 1999 – தேரிருவேலி, ராமநாதபுரம்
  • 2001 – பேரூர், கோயம்புத்தூர்
  • 2004 – ஆண்டிபட்டி, திருவண்ணாமலை
  • 2006 – மாங்குளம், மதுரை
  • 2017 – கீழடி, சிவகங்கை

போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் சான்றாக அமைகின்றன.

ஆய்வுகள்

  1. கார்பன் டேட்டிங் (Carbon Dating) மூலம் கீழடி அகழ்வாராய்ச்சியில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆறு மாதிரிகளின் காலம் கிமு 600 என அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வக (Beta Analytic Lab) முடிவுகள் கூறுகின்றன.
  2. சிந்து சமவெளி நாகரிகத்தோடு கிமு 1700-ல் அழிந்து போன எரிந்து செங்கல் (Burnt Brics) பின் வட இந்தியாவில் பிற்கால மவுரியர் ஆட்சிக் காலமான கிமு 200-ல் வெளிப்பட்டது. ஆனால் அதே வகையான எரிந்து செங்கல்கள் கீழடியில் கிடைத்திருப்பது சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் தமிழ் நாகரீகம் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
  3. சிந்து தளங்களில் கண்டெடுக்கப்பட்ட கிமு 2500 சார்ந்த ராக்கிகாரி பெண்ணின் எலும்புக்கூடு மரபனு பகுப்பாய்வில்(Genetic Analysis), R1a1 எனப்படும் ஆரிய மரபணு இல்லாதது, அங்கு வாழ்ந்தவர்கள் தொல் தமிழர்கள் (திராவிடர்கள்) ஆக இருக்கக் கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் உலகில் தோன்றிய நான்கு மூத்த நாகரிகங்களுள் ஒன்று, மற்றவை எகிப்திய, மெசபடோமிய, சீன நாகரீகங்கள் ஆகும். தற்போது கிடைத்துள்ள ஆய்வுகளின் முடிவை வைத்து

  1. சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் தொல் தமிழர்கள் (திராவிடர்கள்)
  2. அவர்கள் வேதகால ஆரிய வருகையால் தெற்கு நோக்கி விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

ஆக சிந்து சமவெளி விட்ட இடமும் சங்கத் இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று என ஆதாரங்கள் வந்தவண்ணம் உள்ளன.

சிந்து தளங்களில் பேசின மொழிகள் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், அங்கு உள்ள குறியீடுகளை வைத்து சமஸ்கிருதம் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது வெளியாகியுள்ளது. அதனால் தொல் தமிழ் மொழி சார்ந்ததாக இருக்குமோ என ஆராய்ந்து வருகின்றனர்.

இனவியலை வைத்து, மொழியியலை வைத்து ஆரியமும், சமஸ்கிருதமும் தான் அனைத்திற்கும் மூலம் என்ற நிலைப்பாடு பல நூறு வருடங்களாக சமூகத்தில் பேசப்பட்டு வந்த நிலையில். இதனை வேர் அறுக்கும் விதமாக அமைந்தது 1856-ல் வெளியான கால்டுவெல்லின் புத்தகம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம். இந்தப் புத்தகம் தான் பின்னாளில் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோருக்கு வழிகாட்டியது எனலாம். கால்டுவெல்லின் நினைவு விழாவில் ஜீவா பேசுகிறார்,

கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம், இறைப்பணி கழகத்தின் தூதுவர்தாம், சமயப் பரப்பு நோக்கத்தை தலைமையில் சுமந்தவர்தாம் ஆனால் தேன் குடிக்க வந்த வண்டு மகரந்த சேர்க்கை செய்து மலர் காட்டை காய்கனி காடாய் மாற்றுவது போல், சமயத்தை ஏற்றி பிடிக்க வந்த கால்டுவெல் திராவிடம் என்னும் இனவியல் மற்றும் மொழியியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதை தான் அவரின் கதை

கால்டுவெல்லின் புத்தகத்திற்கு பிறகு

  1. இந்திய மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என்பது மாறி, இந்தோஆரிய மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என்றும், திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்றும் ஆனது.
  2. இனவியல் ரீதியில் சிந்து சமவெளியில் வாழ்ந்து கீழ்நோக்கி தள்ளப்பட்டவர்கள் திராவிடர்கள், வட இந்தியாவில் உள்ளவர்கள் ஆரியர்கள் என்ற வாக்கு வலுப்பெற்றது.

இவ்வாறு தமிழ் மக்கள் இனவியல், மொழியியல் ரீதியில் மட்டும் தனித்தன்மை கொண்டவராக இல்லாமல். சங்க இலக்கியம், அதைத்தொடர்ந்த அற இலக்கியம் கூறுவதைப் போல் இலக்கியம், இசை, விளையாட்டு, உணவு, ஆடைகள் என அனைத்து நிலைகளிலும் பண்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனதோடு பயணத்தைத் தொடர்கிறார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *