பண்பாடு என்பது மனிதனால் பெறப்பட்ட வெளிப்படையான மற்றும் வெளிப்படையற்ற நடத்தையின் அறிகுறியாகும். இவற்றை நாம் சின்னங்களாகவும், பண்புகளாகவும், விழாக்களாகவும் பிரதிபலிக்கின்றோம். பண்பாடு இரண்டு நிலைகளில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
- பொருள் சார்ந்த
- பொருள்சாரா பண்பாடு
பொருள் சார்ந்த பண்பாடானது நமது வாழ்க்கையோடு கூடிய பொருட்களான நமது உடைகள், உணவு, வீட்டில் வளர்க்கும் விலங்குகள், வீட்டு உபயோகப் பொருட்களாகும். பொருள் சாரா பண்பாடு என்பது கருத்துக்கள், லட்சியம், எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளாகும்.
பண்பாடு இடத்திற்கு இடம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்தும் போது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறோம். ஒருவர் மிக ஏழையாக இருக்கலாம், விலை குறைவான ஆடையை அணிந்து இருக்கலாம், அவரை நாகரிகம் இல்லாதவர் என்று கருதுவது தவறு. அவர் மிகுந்த பண்பாடு விழுமியங்களைக் கொண்டவராக இருக்கலாம்.
நமது பெற்றோர் பலவற்றை அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். நாளடைவில் அவர்கள் சொந்த அனுபவத்தில் சிலவற்றை சேர்த்தனர். தங்களுக்கு பயன் இல்லாதது என்று கருதுபவற்றை விட்டுவிட்டனர். நாமும் நம் முன்னோர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். நாட்கள் செல்ல செல்ல ஏற்கனவே நடைமுறையில் இருந்தவற்றுடன் புதிய எண்ணங்கள், புதிய கருத்துக்கள் சேர்ந்து, பயனிலாதவை தவிர்த்து பண்பாடாக அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்திய மக்களின் பண்பாடு தொடக்கத்தில் இருந்து ஒரே மாதிரியாக உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பதில், இல்லை. எந்த ஒரு பண்பாடும் ஒரே மாதிரி தங்குவதில்லை, மாற்றத்தின் பல படிகளைக் கடந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பல சிறந்த பண்பாடுகள் வளர்ந்துள்ளன. அதில் பல அழிந்துவிட்டன, சில மற்ற பண்பாட்டினால் இடம்பெயர்ந்து உள்ளன. இவற்றிற்கு மத்தியில் இந்திய பண்பாடு நிலைத்திருக்கக் கூடிய பண்பை கொண்டது, தொடர்ச்சியும் மாற்றமும் நிறைந்த பண்பாடாக இருக்கிறது. இந்திய துணை காண்டத்தில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிந்து சமவெளி நாகரிகம் பல்வேறு மாறுதல் பெற்று இன்று வரை தொடர்கிறது. நமது நீண்ட கால வரலாற்றில் எழுச்சிகள் மற்றும் வீழ்ச்சிகளின் காலம் இருந்தன. இதன் விளைவாக இயக்கங்கள் வளர்ந்தன. சீர்திருத்தங்களை கொண்டு வந்தன. வேத சமய காலத்தில், சீர்திருத்த இயக்கங்கள் புத்த மட்டும் சமண சமயத்தால் 6 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டன. 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமய மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நவீன இந்தியாவிற்கு வழி வகுத்தன. நாம் இன்று அதிர்ஷ்டமான மக்களாக இருக்கிறோம். நம் முன்னோர்கள் எதிர்கொண்ட பல மாற்ற முடியாதவைகளினின்றும், அந்நிய ஆதிக்கத்தினின்று விடுதலையாகி இருக்கிறோம். 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்திய சமுதாயம், சாதிமுறை நிரம்பப் பெற்ற, சிதைவுற்ற மாற்ற இயலாததாக இருந்தது. இது மனித உணர்ச்சிகள் அல்லது விழுமியங்களை கொண்டிராத குறிப்பிட்ட பழக்கங்களை பின்பற்றியது. அறிவுத் தெளிவுள்ள சீர்திருத்தவாதிகளான ராஜாராம் மோகன்ராய் போன்றோர்களால் உலகம் சந்தித்திராத அடக்குமுறைகளில் இருந்து வெளிவர முடிந்தது.
பல பண்பாடுகளின் தாயிடம் மற்றும் அவற்றின் ஒற்றுமையே, இந்திய பண்பாடாக இருக்கிறது. பலவகை நடனங்கள், இசைகள், பழமொழி பேசும் மக்கள் நிறைந்த நாடு இந்தியா. இங்கு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையிலும் வேறுபாடு இருக்கிறது, கேரள மக்கள் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் தேங்காய் எண்ணெயும், உத்திர பிரதேச மக்கள் அங்கு அதிகம் விளையும் கடுகு எண்ணெயும் பயன்படுத்துகின்றனர். பஞ்சாபில் பங்கரா, கேரளாவில் ஓணம், தமிழ்நாட்டில் பொங்கல் என கலாச்சார விழாவும் வெவ்வேறாக இருக்கிறது. பாடல், நடனம், நாடகம், கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, வெவ்வேறு மொழியில் உள்ள நமது இலக்கியங்கள், விழாக்கள் என்ன வேற்றுமை ஆயிரம் இருப்பினும், அந்த வேற்றுமை தான் எங்கள் ஒற்றுமை என்பதை முன்னிறுத்து நாடு இந்தியா. இன்று நமது இந்திய திருநாட்டின் அடித்தளமாக இருக்கும் அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியலமைப்பும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது.
பல்வேறு வேற்றுமை நிறைந்த பண்பாட்டின் விளைவாக உருவாகி இன்று நமது நாடு முன்னிறுத்தும் மிக முக்கியமான நோக்கமாக உருவெடுத்து இருப்பது மத சார்பின்மை. இன்று ஒரு தனிமனித பண்பாகவும் இருக்கிறது. பல்வேறு பண்பாடு சார்ந்த மக்கள் ஒருவரோடு ஒருவர் நீண்ட காலம் தொடர்பு கொண்டதின் விளைவே இந்த மதசார்பற்ற பண்பு. இந்திய அரசியலமைப்பும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.
பண்டைய காலத்தில் இருந்து இந்நாள் வரை இந்தியாவில் இணையாகவே சென்று இருக்கும் பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாரா பண்பாடும், இணையாகவே அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பொங்கல் போன்ற விழாக்களில் பொருள் சார்ந்த ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். அதே நேரத்தில், அதே வேகத்தில் பொருள் சாரா பண்பாடு விழுமியங்களையும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். நமது பண்புகள், லட்சியங்கள், எண்ணங்கள் வலுபெற வேண்டும். நல்ல பண்பாடு நிறைந்த சமூகம் படைப்போம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.