பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய அரங்கேறும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. பெண் குழந்தைகள் பிறந்தது முதல் தங்கள் கடைசி காலம் வரை வன்முறைகள் துரத்திக்கொண்டே இருக்கிறது. பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், எழுத்தறிவின்மை, ஊதிய குறைவு இதைத்தாண்டி சமூக கட்டுப்பாடுகள், பாரம்பரிய சடங்குகள் என சமூகத்தின் அனைத்து நிலையிலும் தாங்கள் ஏதோ ஒரு விதத்தில் புறந்தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்பு அது சார்ந்த சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தும், இந்த சூழ்நிலை தான் இன்றும் நிலவுகிறது. இது இந்தியர்கள் இந்தியாவை ஆள தொடங்கி எழுபது ஆண்டுகள் கழித்து இருக்கும் நிலைமை.
கருக்கொலைகள்
பண்டைக்காலம் தொட்டு இருந்து வரும் மோசமான பழக்கங்களும் ஒன்று பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால், எருக்கம்பால் கொடுத்துக் கொல்வது. இதுபோன்ற சிசுக்கொலைகள் அதிகம் இருந்த பண்டைக்காலம், இடைக் காலங்களில் கூட பெண் குழந்தைகளை கருவிலேயே அடையாளம் கண்டு அளிக்கும் முறை ஏதும் இல்லை. கருக்கொலைகள் முழுக்க முழுக்க நவீனகால தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பின் எழுந்தவை. அதாவது வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பிறந்த பிறகுதான் என்றிருந்த நிலைமாறி, பிறக்கும் முன்பே வன்முறை என்ற சூழல் உருவானது. குழந்தைகளை கருவிலேயே அடையாளம் காணுவதை தடை செய்யவும், மருத்துவர்களை கட்டுப்படுத்தும் வண்ணம் “பிறக்கும் முன்பு பாலினம் கண்டறிதல் தடை சட்டம் 1994” கொண்டு வரப்பட்டது (Pre-Conception Pre-natal Diagnostic Technique Act, 1994). இருப்பினும் அதிக அளவில் சட்டவிரோதமாக, குறிப்பாக பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறது.
சிசுக்கொலை
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கிடுகின்றனர். இதன்மூலம் மக்களின் எண்ணிக்கை, ஆண் பெண் பாலின விகிதம், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் முதலியவற்றை கணக்கிடுகின்றனர். இதில் கொடூரம் என்னவென்றால் 1961 கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் என்றிருந்த குழந்தைகளுக்கான பாலின விகிதம், 2011 மிக மோசமாக 914 என்ற நிலைக்கு வந்தது. மத்திய அரசின் “மாதிரி பதிவு கணக்கெடுப்பின்படி” (Sample Registration Survey) 2013-15 இல் 900, 2014-16 இல் 898, 2015-17 இல் 896 என குறைந்து வருவது சிசுக்கொலை, கருக்கொலை அதிகரிப்பை உறுதிசெய்கிறது. சிசு கொலையை தடை செய்யும் சட்டம் ஆங்கில ஆட்சி தொட்டே இருந்து வருகிறது “பெண் சிசுக்கொலை தடுப்பு சட்டம் 1870” (Female Infanticide Prevention Act, 1870). சிசு கொலையை மாறுபட்ட வழியில் குறைக்க இந்தியாவுக்கு, தமிழகத்தின் கனவு திட்டமான “தொட்டில் குழந்தை திட்டம் 1992” வழிகாட்டியது. இருப்பினும் இன்றளவும் மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு சென்று சேரவில்லை என்பதே உண்மை.
குழந்தை திருமணம்
1891 இல் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை பிரிட்டிசார் 12 ஆக நிர்ணயித்த போது, பழமைவாத சமூகத்தினர் இதனை கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்ந்து 1929 இல் 15 வயது ஆக உயர்த்தப்பட்டது. பழமைவாத சமூகத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் 1978 இல் “குழந்தை திருமண தடுப்புச் சட்டம்” திருத்தப்பட்டு தற்போதைய 18 வயது நிர்ணயிக்கப்பட்டது (The Child Marriage Restraint Act). குழந்தை திருமணம் சமூகத்தில் இன்றும் நிலவி வருவதற்கு காரணம்
- வறுமை
- போதிய கல்வியறிவு இல்லாமை
- பெண்குழந்தைகளுக்கு சமுதாயத்தில் உயர்நிலை தராமை
- பெண் குழந்தைகளை பொருளாதாரச் சுமையாக நினைத்தல்
- சமுதாய பாரம்பரியமும் மரபுகளும்
- ஆணாதிக்க சமூக வெளிப்பாடு
இந்தியாவில் குழந்தைத் திருமணம் குசராத், பீகார், சார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, சென்னை போன்ற மாவட்டங்களில் பரவலாக நடைபெறுகிறது. தற்போது பரவி வரும் கொரோனா நோய்க்கிருமியின் தாக்கத்தால் மேலும் 40 லட்சம் குழந்தைகள், குழந்தைத் திருமணத்திற்கு ஆளாக அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை கொடுத்துள்ளனர் (International Children Charity Report). பழைமைவாத சமூகத்தின் எதிர்ப்பு ஒருபுறமிருக்க, 2020 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் போது பெண்களின் கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு திருமண வயது 18 லிருந்து உயர்த்த ஓர் உயர்மட்டக் குழுவை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது.
பெண் கல்வி
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. 1813 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக்கண்டத்தில் கல்வி மத அடிப்படையில் இருந்தது. இந்துக்களுக்கு பண்டிதர்கள் பாடசாலையில் சமச்கிருத மொழியிலும், இஸ்லாமியர்களுக்கு மௌல்வி மதராசாவிலும் கல்வியை கற்றுக் கொடுத்தனர். இங்கு ஆண்களுக்கு மட்டுமே கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு கல்வி வேண்டும் என்றால், சில உயர்ந்த குடும்பத்தில் மட்டும் ஆசிரியர்களை வீட்டுக்கு அழைத்து கற்றுக்கொடுத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இருந்த பெண் தலைவர்கள் அனைவரும் இவ்வாறு கல்வி கற்றவர்களே. ஆங்கிலேயரும் ”கீழ்நோக்கி வடிகட்டுதல் கோட்பாட்டை” மையப்படுத்தி கல்வியைக் கொடுத்தனர் (Downward Filtration Theory). அதாவது சமூகத்தின் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கல்வியை கொடுப்பது. பின் அந்த உயர் நிலையில் உள்ளவர்கள் கீழ்நோக்கி சேர்க்கும் முறை தான் இந்த கோட்பாடு. பின்னாளில் இவை மாற்றப்பட்டாலும் சமூகத்தில் இதன் விளைவு பெண்களுக்கு அதீத பாதகத்தை விளைவித்தது. சுதந்திர போராட்டம், அரசியல் அமைப்பு சாசன அமர்வு போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பு மிக சொற்ப அளவே இருந்தது. சுதந்திரத்திற்கு பின் தான் பெண்கள் சிறிதுசிறிதாக கல்வியில் உயர்ந்து வருகின்றன. 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கல்வியறிவு 74%. இதில் பெண்களுக்கு 65%, அதாவது 35% சதவீத பெண்கள் தங்கள் தாய் மொழியில் எழுதத் தெரியாதவர்கள். கல்வியில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதே உண்மை.
பெண்களின் சமூகநிலை
- பெண்கள் படைக்கப் பட்டிருப்பதே ஆண்களுக்காக தான், அதைதான் குடும்ப அமைப்பாகவும் வைத்துள்ளன.
- குடும்பத்தில் பெற்றோர் தாங்கவேண்டிய குடும்ப சுமைகளைச், சிறு வயது கொண்ட பெண்பிள்ளையை தாங்க வைக்கின்றனர். பலப்பல பணி சுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
- வாழ்க்கை துணையை பெற்றோரே பார்த்து மணமுடித்து வைக்கும் நிலைதான் சமூகத்தில் இன்றளவும் இருக்கிறது. பழமைவாதிகள் இதனை ஆதரித்தும் வருகின்றனர்.
இதுதவிர வரதட்சணை, கலாச்சாரம், பண்பாடு என சமூகத்தில் நிலவிவரும் பழக்கங்கள், பெண்கள் உரிமைகளுக்கு, வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருந்து, நாட்டின் வளர்ச்சியை தடை படுத்துகிறது என்பதே உண்மை.
“ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்”
சட்டங்கள் அதிக அளவில் இருந்தும் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் மாற்றம் என்பது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. “சதி” என்ற ஒன்றை ஆங்கிலேய அரசு 1829 சட்டத்தின் மூலம் ஒழித்தது என்று கூறுவது சரியல்ல. அந்தச் சட்டம் ஆங்கிலேயே எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும், சமூகத்துக்கு புறம்பானது என்றும் பழைமைவாத சமூகத்தினர் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உண்மையில் “சதி” ஒழிய மூலக்காரணம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், இதற்கு காரணம் ராம் மோகன் ராய் மற்றும் அவரின் சமகால சமூக சீர்திருத்த இயக்கங்களுமே ஆகும்.
நல்ல எண்ணங்கள் சமூக மாற்றத்தை முன்னெடுக்கிறது. சட்டதிட்ட இல்லாத உலகிலும் சரியாக வாழ முடியும் என்ற மாற்றத்தை முன்னெடுப்போம்
நாம் மாறுவோம்! சமூகத்தை மாற்றுவோம்!