நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் பல்வேறு விஞ்ஞான கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி என்று நகர்கிறது. இவ்வளர்ச்சியில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் செல்போன். இன்று இந்த செல்போன் நமது அடிப்படை தேவைகளுள் ஒன்றாக உருவெடுத்ததோடு, மனித வாழ்வு மேம்பட மிக இன்றியமையாததாக இருக்கிறது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை படி இந்தியாவில் 94% பேர் செல்போன் வைத்திருக்கின்றனர். உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் செல்போன், நகர்ப்புறம் கிராமப்புறம் பாராமல் அதிக அளவில் மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறது. வறுமை குறிப்பிட்ட அளவு இந்தியாவில் இருந்தபோதிலும், செல்போன் வாங்குவது பயன்படுத்துவது என்பது எந்த ஒரு பாதிப்பும் இன்றியும் வளர்ந்தோங்கி உள்ளது.
செல்போனின் பயன்பாடு என்பது எண்ணிலடங்கா, எந்தத் துறையை எடுத்தாலும் சரி, எல்லா நிலையில் உள்ள மனிதருக்கும் ஒரு சம நிலையை உருவாக்கி வருகிறது. செல்போன் சரியான முறையில் பயன்படுத்தும் போது, அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
- ஆற்றலை வெளிகொணர
- நினைவூட்டிட
- தகவல்கள் பெற
- வங்கி மற்றும் நிதி
- தொலைத்தொடர்பு
- செய்தித்தாள் மட்டும் புத்தகம்
- பயணசீட்டு முன்பதிவு
- கருத்து சுதந்திரம்
செல்போனை சரியாக பயன்படுத்த தவறும் பட்சத்தில், நாம் மிக மோசமான நிலைக்கு நம்மை அறியாமலே தள்ளப்படுகிறோம். எவ்வாறெனில்
- விளையாட்டு, சூதாட்டம் என்று நம்மை வெளிவர முடியாத வலைக்குள் சிக்க வைக்கும்.
- ஆபாச செய்தி, படம் நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்
- யூடீயூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் நேரத்தை உறிஞ்சும்.
ஒட்டுமொத்தத்தில் டோப்பமின் என்னும் சுரப்பி மூளையில் சுரந்து நமக்கு இன்பத்தை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் நமது செல்போன் பயன்பாட்டை அதிகரிக்கும். மது அருந்துபவருக்கு சுரக்கும் அளவுக்கு டோப்பமின் சுரந்து நரம்பியல் ரீதியில் நம்மை செல்போன் என்னும் போதைக்கு அடிமையாக்கும்.
கவனித்து பார்ப்போமேயானால் நம்மால் செல்போன் பயன்பாட்டை குறைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. தினமும் மூன்று மணி நேரம் என்று இருப்பது நான்கு, ஐந்து என்று அதிகரிக்கும். மது அருந்துபவர் ஒரு பாட்டிலில் இருந்து இரண்டு, மூன்று என்று செல்வது போல் நரம்பியல் மாற்றம் நம்மை போதைக்கு அழைத்துச் செல்லும்.
இவ்வலையில் அகப்படாமல் இருக்க அல்லது வெளிவர
- பொழுது மற்றும் பொழுதுபோக்கு குறித்த சரியான புரிதலை வளர்ப்பது
- செல்போன் நோன்பு என்று குறிப்பிட்ட நேரம் செல்போனிடமிருந்து விலகி இருத்தல்
- தவறி போனவற்றை அடையாளம் காணுதல்
- உடலைப் பேணிக்காப்பது
- நேரடி மனித தொடர்பு
- திறமையை வளர்ப்பது
இன்று நாம் செல்போன் இல்லாமல் வாழ முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். சிறுவர் முதல் பெரியவர் வரை செல்போனில் மூழ்கியுள்ளனர். என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்காமல் செல்போனால் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதில் அடிமையாகாமல் வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயம். அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவையை சிறிது சிறிதாக செல்போனின்றி செய்து முடிக்க பழகுவோம். நம்மை அறிவு, சிந்தனை, உணர்ச்சி, உடல்நலம் என்று ஒருங்கிணைந்த அனைத்து நிலைகளில் முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.
-gmmonish