ஆளுகின்றவன் தன்னால் ஆளப்படும் பகுதி மக்களுக்கு அளிக்கும் தளர்வுகளே உரிமை. ஆட்சியாளர்கள் ஒருபோதும் விரும்பி தளர்வுகளை அளித்தது இல்லை. உலகில் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த உரிமைப் போராட்டத்தின் விளைவே இன்று இருக்கும் உரிமைகள். திருவிதாங்கோடு மன்னராட்சி பகுதியில் பெண்கள் மேலாடை அணிவதற்கே ஒரு உரிமை போராட்டம் தேவைப்பட்டது. இவ்வாறான உரிமைப் போராட்டம் மூலம் மக்கள் போராடி மீட்டெடுத்த உரிமைகள் சட்ட வடிவில் நமக்கு இன்று அரணாக இருந்து வருகிறது. இவ் உரிமைகளை அரசியல் உரிமை, பொருளாதார உரிமை, சமூக உரிமை, கலாச்சார உரிமை என பிரித்து வகைப்படுத்தி வைத்திருக்கிறோம்.
உரிமை போராட்டம்
உலகளாவிய உரிமை போராட்டம்
i. எட்டு மணி நேர வேலை என்னும் தொழிலாளர்களின் போராட்டம்
ii. அடிமை முறை ஒழிக்கும் கருப்பின மக்களுக்கான போராட்டம்
iii. அரசியல் உரிமைக்கான பிரஞ்சு புரட்சி
iv. சுதந்திர போராட்டங்கள்
இந்தியா சந்தித்த உரிமை போராட்டம் என்பது மற்ற நாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்கு ஆண்டாண்டு காலமாக சமூகத்தின் கடைநிலையில் தீண்ட தகாதவர்களாக இருந்தவர்களுக்கு அடிப்படை உரிமை என்று ஒன்று இருந்ததே இல்லை. அவர்கள் ஆளுகின்றவர்களால் மட்டும் அடிமைப்படவில்லை. தன்னைவிட உயர் சாதி மக்களாலும் அடிமைப்படுத்தப்பட்டன. கோவிலுக்கு செல்லக்கூடாது, நீர்நிலைகளை பயன்படுத்தக் கூடாது, தலைப்பாகை அணியக்கூடாது, உயர் சாதியினர் மேல் தன் நிழல் கூட பட்டுவிடக் கூடாது போன்ற எண்ணிலடங்கா அடக்கு முறைகளால் ஈராயிரம் ஆண்டுகளாக அடிப்படை உரிமையின்றி இருந்தவர்கள்.
கல்வி உரிமை
இன்று நடக்கும் திருமணங்கள் மதங்களின் கீழ் இருப்பது போல், 19 ஆம் நூற்றாண்டு வரை கல்வி கற்கும் உரிமை, சொத்து உரிமை போன்றன மதங்களை மையப்படுத்தியே இருந்தன. இந்து மதத்தை சார்ந்தவர்களாயின் பண்டிதர்களால் பாடசாலையிலும், இசுலாமிய சமயத்தவராயின் மௌலவிகளால் மசூதியிலும் பாடம் கற்பிக்கப்பட்டது. இங்கு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்து அவர்களுடன் தங்கி கல்வி கற்றுக்கொள்ள வேண்டும். இவ்மதம் சார்ந்த கல்வி முறைகளில் பெண்களுக்கு, கீழ் சாதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. 1600 களில் இந்தியாவில் கால் பதித்த ஆங்கிலேயர்கள் 1813 வரை கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் துளி அளவு அக்கறை செலுத்தவில்லை. சமூக சீர்திருத்த இயக்கங்கள், ராசா ராம் மோகன் ராய் போன்றோரின் அழுத்தங்களால் 1813 சட்டம் (Charter Act 1813) மூலம் கல்விக்காக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி கல்வியை முறைப்படுத்தும் முயற்சியில் கால் வைத்தனர். பின் அதைத் தொடர்ந்து சட்டங்கள் மற்றும் மெக்காலே குழுவின் வழி கல்வியை முற்றிலுமாக மதத்தில் இருந்து பிரித்து எடுத்தனர். இதன் மூலம் அறிவியல் சார்ந்த கல்வி, பெண்கள் கல்வி கற்கும் உரிமை மேலோங்கியது இருப்பினும் ஆங்கிலேயரின் கீழ்நோக்கி வடிகட்டும் கோட்பாட்டால் (Down Filtration Theory) கல்வி கற்கும் உரிமை அனைவருக்கும் சென்று சேரவில்லை முன்னிருந்த உயர் சாதியினரே கல்வி கற்றனர். 1947 இல் இந்திய சுதந்திரம் பெற்றபோது வெறும் 18% மக்களை எழுத்தறிவுடன் இருந்தனர்.
பெண்ணுரிமை
நம் ஊர்களில் ஆணாகப் பிறந்து விட்டால் பிறந்ததிலிருந்தே குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் வேண்டப்பட்டவர் ஆகிவிடுகிறார். ஆனால் பெண் குழந்தை என்றால் பல கட்டுப்பாடுகள் போதாததுக்கு பிறந்ததிலிருந்தே திருமணத்திற்காக பெற்றோர்கள் பணம் சேர்க்க வேண்டி இருக்கிறது.
I. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
II. பெண் என்றால் பேயும் இறங்கும்
III. பெண்புத்தி பின்புத்தி
IV. அடக்கமே பெண்ணுக்கு அழகு
போன்ற பெண் கட்டுப்பாடுகளை நிலை நிறுத்தும் பிற்போக்குத்தனமான பழமொழிகள் இன்றும் அதிக அளவில் நம்ம ஊர்களில் பேசப்படுகிறது. இது போன்ற பழமைவாத வார்த்தைகள், கட்டுப்பாடுகள் இன்றும் குறைந்ததாக இல்லை. இது தவிர பெண்கள் பூ போன்றவர்கள், மென்மையானவர்கள் அவர்களை பாதுகாப்பாக வைக்கிறோம் என்று எப்போதும் எங்கு சென்றாலும் இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து போக வேண்டும் அல்லது ஆண் துணையோடு மட்டுமே போக வேண்டும் என்ற பேச்சு அவர்களின் இயல்பான தைரியத்தை மனதளவில் மழுங்கடித்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு தேவைப் படுபவர்களாகவே ஆக்கி விடுகிறது. இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால் பெண்களும் இவ்கட்டுப்பாட்டை விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர்.
ராசா ராம் மோகன் ராய் சதி ஒழிப்பை முன்னெடுத்த நேரத்தில் தனது சகோதரன், இறக்க நேரிட்டது. நவீன கல்வி முறையில் கற்று ஊரில் சதி ஒழிய வேண்டும் என்று சொன்னவரால், தனது குடும்பத்தில் தனது சகோதரனின் மனைவி உடன்கட்டை ஏறுதலில் இருந்து நிறுத்த முடியவில்லை. அவளே விருப்பத்துடன் கணவன் எரிந்து கொண்டிருந்த தீயில் இறங்கி இறக்கின்றாள். அதாவது பெண்கள் தங்கள் உரிமையை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடுகள் மூலம் தங்களின் மனதை இச்சமூகம் மழுங்கடித்தே வைத்திருக்கிறது.
சமூக உரிமை
சமூக உரிமைகளை பெறுவதில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பெரும் பங்கு வகித்தது
I. ராசா ராம் மோகன் ராயின் பிரம்ம சபா
II. சயிது அகமது கானின் அலிகார் இயக்கம்
III. ஆத்மா ராம் பாண்டுரங்கின் பிராத்தனா சபா
போன்றன பெண் கல்வி, விதவை மறுமணம், சதி ஒழிப்பு போன்ற சமூக சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் அமைத்ததில் பெரும் பங்காற்றியவை.
சிறிது சிறிதாக போராட்டம், இயக்கங்கள் மூலம் நாம் பெற்றிருக்கும் உரிமைகளை எக்காரணத்தினால் இழந்து விடக்கூடாது. அத்தோடு இன்றைய காலகட்டத்திற்கு தேவையான உரிமைகள் நமக்கு கிடைத்திட வேண்டும். ஆட்சியாளர்களால், சமூகத்தால் உரிமைகள் பறிக்கப்படின் குரல் கொடுப்போம். உரிமையின் மக்களாய் வாழ்வோம்.