நம் நாட்டில், நாம் வாழும் பகுதியில் பல்வேறு விழாக்களை கொண்டாடுகிறோம். கலாச்சாரம் சார்ந்தது என்று எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் பொங்கல், கேரளத்தில் ஓணம். சமயம் சார்ந்தது என்றால் இந்து சமயத்தில் தீபாவளி, இசுலாமியத்தில் ரம்சான், கிறித்தவ சமயத்தில் கிறித்து பிறப்பு. தலைவர்களின் நினைவு நாள்கள் சார்ந்த விழாக்கள் என்று எடுத்துக்கொண்டால் விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர்கள் தினமாகவும், அப்துல் கலாமின் நினைவு நாள் உலக மாணவர்கள் தினமாகவும், காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நாள் வெளிநாட்டு வாழ் இந்தியர் தினமாகவும் சிறப்பித்து வருகிறோம். இப்படியான ஒவ்வொரு விழாவிற்கும் அதற்கே உரித்தான வரலாறு, தனித்தன்மை, சிறப்புகள் உள்ளன.
அந்த வகையில் பொங்கல் விழா, தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும், தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை காட்டுவதாகவும், மக்களின் அறநெறி, வாழ்வியல் போன்றவற்றை சித்தரிப்பதாக உள்ளது. துவக்க காலத்தில் விவசாயிகளால் மட்டுமே கொண்டாடப்பட்ட பொங்கல் விழா, இன்று ஒரு பொது விழாவாக கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக உருவெடுத்துள்ளது. நமது முன்னோர்கள் பின்பற்றிய கலாச்சாரம் சார்ந்த அறநெறிகளில் இருந்து வழி தவறி விடாமலும், தவறிய வழியை சரிசெய்யவும் இது போன்ற விழாக்கள் நமக்கு ஒரு வாய்ப்பினை அளிக்கிறது.
சமீப காலமாக உலகெங்கும் ஓர் அறமற்ற செயல் அதிகரித்து வருகிறது. அறம் சார்ந்த இலக்கியங்களான திருக்குறள், நாலடியார், திரிகடுகம் போன்ற நூல்கள் கமழும் தமிழகத்திலும் இது அதிகம். இந்த அறமற்ற செயலான “வெறுப்பு பேச்சு” அதிகரிப்பதால் சமூகத்தில் பிரிவினை ரீதியான குழப்பம், குடும்ப பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன
வெறுப்பு பேச்சு முதலிய அறமற்ற செயல் பற்றி குறிப்பிடும் போது, அறம் என்றால் யாது என்பதற்கு திருவள்ளுவர் கூறுவார்
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்”
என்று. அதாவது பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு பேச்சு முதலிய நான்கும் அறமற்ற மனிதனின் அடையாளமாக குறிப்பிடுகிறார்.
தமிழகத் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பொங்கல் நன்னாளில், நமது முன்னோர்கள் வெளிப்படுத்திய வாழ்வியல் அறநெறிகளை கடைபிடிக்க முற்படுவோம். கடை பிடிப்பதோடு மட்டுமல்ல, மற்ற மொழி இலக்கியங்களை ஒப்பிடும்போது அறநெறி சார்ந்த கருத்துக்களில் தமிழ் இலக்கியம் உலகிற்கே முன்மாதிரியாய் இருப்பதுபோல், வெறுப்பு பேச்சு குறைந்த சமூகம் படைக்க நமது முன்னோர்களை போல் நாமும் முன்மாதிரியாக இருக்க முற்படுவோம்.