நாட்டில் நடப்பவற்றை, நாட்டை ஆள்பவர்கள் எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவது ஊடகம். தெரியப்படுத்துவது மட்டுமே ஊடகத்தின் பொறுப்பன்று. இன்று உலகம் சந்தித்திருக்கும் அனைத்து சீர்திருத்தமும் குறிப்பிட்ட காலத்தில் உள்ள வெவ்வேறு வடிவிலான ஊடகத்தினாலே சாத்தியமானது. 3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த மக்களிடம் – நாம் விடுதலை பெற போகிறோம், நம்மை ஒருவர் விடுவிக்கப் போகிறார் என்ற நம்பிக்கையூட்டும் தகவல் பரிமாறப்பட்ட பிறகே விடுதலை சாத்தியமாயிற்று. அத்தகைய தகவல் பரிமாற்றமே ஊடகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இந்தியா ஆங்கிலேயரின் கீழ் இருந்தபோது மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற உணர்வை தூண்டியது ஊடகங்களே. சுதேச மித்திரன் (1882), இந்தியா(1906), நியூ இந்தியா(1914), பிரபஞ்ச மித்திரன்(1916) போன்ற பத்திரிகைகளின் பங்கும் இதனுள் அடங்கும். சதி ஒழிப்பு, திருவிதாங்கூர் மன்னராட்சி பகுதியில் பெண்கள் மேலாடை அணியும் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் கல்வி கற்கும் உரிமை என நிகழ்ந்த அனைத்து சீர்திருத்தத்திலும் ஊடகத்தின் பங்கு மிக இன்றியமையாதது. ஆக தகவலை தெரிவிப்பது, அறிக்கை வெளியிடுவது, பிரதிபலிப்பை ஏற்படுத்துவது என மூன்று கட்டங்களாக ஊடகம் வலம் வருகிறது.
இன்றிருக்கும் ஊடகங்களைப் போலன்று மன்னராட்சி கால ஊடகங்கள். மக்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று மன்னன் எண்ணுகிறானோ அதுவே தகவலாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னர்கால கல்வெட்டுகள், ஓவியங்கள், செப்பேடுகள் போன்றன அவ்வாறே அமையப்பெற்றுள்ளது. ஊடகங்களின் பரிணாம வளர்ச்சியை மூன்று நிலைகளாக வகுக்கலாம்.
- முதல் நிலை – கல்வெட்டு, ஓவியம், செப்பேடு, ஓலைச்சுவடி
- இரண்டாம் நிலை – பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி
- மூன்றாம் நிலை – நவீன கைபேசி, சமூக ஊடகம்
முதல் நிலை, இரண்டாம் நிலையில் ஒரு வழி தொடர்பை கொண்டதாக இருந்த ஊடகங்கள், மூன்றாம் நிலையில் இரு வழி தொடர்பை கொண்டதாக உருவெடுத்தன. ஒரு வழி தொடர்பில், நமக்கு வரும் தகவல்களை பார்த்து கேட்டு தெரிந்து கொள்ள மட்டுமே முடியும். இரு வழி ஊடகத்தில் நமக்கு வரும் தகவல்களுக்கு கருத்து, விளக்கம், எதிர்கருத்து என பதிவு செய்யலாம். எடுத்துக்காட்டு சமூக ஊடகங்கள் – FB, Insta.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது பத்திரிகைகள். ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் மீட்டுருவாவதாக இருந்தது. இந்தியாவில் முதல் செய்தித்தாளான பெங்கால் கெசட் (1780) ஆங்கிலேயரை எதிர்த்து ஆங்கிலேயராலே தொடங்கப்பட்டது. வெரும் இரண்டு ஆண்டுகளில் தடை செய்யப்பட்டு இருந்தாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஊடக உரிமை விதிமுறை 1823, படி ராஜாராம் மோகன்ராயின் “மிராத்-உல்-அக்பர்” செய்தித்தாளை தடை செய்தனர். வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் 1878, படி இந்திய மொழிகளில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் தடை செய்தனர். பல தடைகளை தாண்டி தகவலை கொண்டு சேர்த்து இந்திய விடுதலைக்கு விட்டுத்ததில் பத்திரிகைகளின் பங்கு அளப்பது.
சங்ககால ஊடகம்
பண்டைய தமிழ் உலகம், தகவல்களை பரிமாற. தூது, பறை, வில்லுப்பாட்டு போன்றவற்றை பயன்படுத்தினர். தூது விடுதலுக்கு தனி இலக்கணமே வகுத்துள்ளனர்.
தூது
ஒருவர் தம் கருத்தை மற்றொருவருக்கு தெரிவிக்க மக்களையோ அல்லது பறவையையோ அனுப்புவது தூதாகும். திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற ஒரு தனி அதிகாரம் அமைத்துள்ளார் இப்பகுதியில் தூது செல்பவர்களின் பண்புகள், தூது செல்பவர்களின் இலக்கணம், தூது சொல்லும் முறை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
பறை
மனிதன் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை உண்ண பின் அவற்றின் தோலை கொண்டு உருவாக்கியதே பறை. பறையிலிருந்து எழும் ஒலி விரைவாக மக்களிடம் சென்றடையும் என்பதை உணர்ந்த மனிதன், ஒவ்வொரு வகையான செய்தியை சொல்ல ஒவ்வொரு வகையான பறையை அடித்தான். மதம் கொண்ட யானை வருவதை முன்னறிவிக்க ஒருவித பறையை பயன்படுத்தி உள்ளான் (கலித்தொகை). திடமான பறையின் ஒலி 5 கிமீ மேல் வரை செல்லவல்லது. ஒருவன் பறை அடிக்கும் செய்தியை கேட்டு மற்றொருவன் முழங்க நெடுந்தொளிவுக்கு செய்தியை கொண்டு சென்றான். பண்டைய காலத்தில் பறை என்பது தோல் கருவியின் பொதுப்பெயர். சுமார் 70 வகையான தோல் கருவிகளை பண்டைய தமிழகம் கொண்டிருந்தது.
வில்லுப்பாட்டு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாட்டார் முறை வில்லுப்பாட்டாகும். தெய்வம், அரசியல் தலைவர்கள், புகழ்பெற்ற ஆளுமைகளின் வரலாறுகளை கொண்டதாக இருக்கும். தகவல் தொடர்பு ஊடகமாக பயன்படுத்தப்பட்டது.
தரையில் சிந்திய தண்ணீர் எட்டுத்திக்கிலும் தவழ்ந்து பரவுவதை போல், ஊடகம் என்பது இன்றைக்கும் பல முகங்கள் கொண்டு பரந்து விரிந்துகிடக்கிறது. பல நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல இவ் ஊடகத்தை சரியானதாக பயன்படுத்த வேண்டியது அவசியம். ஊடகங்கள் தவறு செய்வதில்லை, மாறாக அதனை பயன்படுத்தும் மனிதர்கள் தனது சுயநலத்திற்காக ஊடகங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். இது சரி செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் காக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் நிலைபெற வேண்டும்.
–Gm Monish