அரசியலமைப்பு என்பது நாட்டின் அடிப்படை ஆதார சட்டமாகும். நாட்டின் புனித நூல் போன்றது. இது எழுதப்பட்டோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம், அரசின் அதிகார எல்லையையும் மக்களின் உரிமைகளையும் எடுத்துரைக்கும், நாட்டில் உள்ள அனைத்து சட்டங்களுக்கும் தாய் போன்றது. இது நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் இருந்து வேறுபட்டது. நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், இந்த அரசியல் அமைப்பு சாசனத்திற்கு கண்டிப்பாக ஏற்றதாக இருத்தல் வேண்டும்.
இன்று உலகில் இருக்கும் மிகப் பழமையான அரசியலமைப்பு அமெரிக்க அரசியலமைப்பு சாசனம். 1789 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பல நாடுகளுக்கு மாதிரியாகவும், இந்திய அரசியலமைப்பில் உள்ள முகப்புரை, அடிப்படை உரிமைகள், குடியரசு தலைவரை பதவி நீக்கும் முறை போன்றவற்றிற்கு ஆதாரமாகவும் இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பானது சுதந்திரம் அடைந்த பிறகு எழுந்த சவால்களான பாகிஸ்தான் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது, மாநிலங்களை ஒன்றிணைப்பது, சட்ட ஒழுங்கை பராமரிப்பது, சாதிய ஒடுக்கு முறைகளை களைவது போன்றவற்றிற்கு மத்தியில் எழுதப்பட்டது. அரசியலமைப்பை எழுதும் வரலாற்று சிறப்புமிக்க பணியை அரசியல் நிர்ணய சபை முன்னெடுத்தது. அரசியல் நிர்ணய சபையை ஆங்கிலேயர் ஆட்சி செய்த பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரும், மன்னர் ஆட்சி செய்த பகுதியிலிருந்து 70 பேருமாக, மொத்தம் 299 பேருடன் உருவாக்கப்பட்டது. இவர்களால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எடுத்து இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கியது. உருவாக்கிய அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட நாள் நவம்பர் 26. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் சனவரி 26. நவம்பர் 26ஐ அரசியலமைப்பு தினமாகும், ஜனவரி 26ஐ குடியரசு தினமாகும் நாம் கடைபிடிக்கிறோம்.
நாட்டின் பரந்த பன்முகத்தன்மை, மத்திய மற்றும் மாநிலங்களுக்கு ஒரே அரசியல் அமைப்பு, சட்ட வல்லுநர்களின் ஆதிக்கம், சுதந்திரத்திற்கு முந்தைய 1935 இந்திய அரசு சட்டத்தின் தாக்கம் போன்ற காரணங்களால் இந்திய அரசியலமைப்பானது இன்று உலகில் இருக்கும் அரசியலமைப்புகளில் மிக நீண்டதாக உள்ளது. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து விடக்கூடாது என்பதற்காக, மூன்று பெரும் பிரிவுகளாக அதிகாரம் பிரிக்கப்பட்டுள்ளது.
- சட்டம் இயற்ற சட்டமன்றம் (Legislative)
- சட்டத்தை நடைமுறைப்படுத்த நிர்வாகம் (Executive)
- இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்பு சாசனத்திற்கு உகந்ததா என்று கவனிக்க நீதிமன்றம் (Judiciary)
அரசு தனது அதிகாரம் மூலம் மக்களை ஒடுக்குவதை தடுப்பதற்காக, மக்களுக்கு ஆறு பெரும் உரிமைகளை அரசியலமைப்பு வழங்கி உள்ளது. சமத்துவ உரிமை (Art 14 – 18), சுதந்திர உரிமை (Art 19 – 22), சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art 23 – 24), சமய உரிமை (Art 25 – 28), பண்பாடு மற்றும் கல்வி உரிமை (Art 29 – 30), தீர்வு பெறும் உரிமை (Art 32). இவ் உரிமைகளை மீறி அரசு தனது சட்டங்களை வகுத்தால், மக்கள் நீதிமன்ற மூலம் பாதிக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்கலாம். மக்களின் உரிமை பாதித்ததால் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டங்கள்,
- தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2010 – பிரிவு A
- தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டம் 2014
- பினாமி பரிவர்த்தனை சட்டம் 1988 – பிரிவு 3(2)
அரசு மக்களை ஒடுக்குவதை தடுப்பதற்காக அடிப்படை உரிமைகள் இருப்பது போல், நம் நாட்டின் சாபக்கேடான மக்களே மக்களை ஒடுக்கும் சாதியத்தை களையவும் உரிமைகள் உள்ளது. மக்களே மக்களை தீண்டத்தகாதவராக கருதுவது, பொது கிணறு, நீர்நிலைகளில் தண்ணீர் அருந்தவிடாமல் வைப்பது போன்ற ஒடுக்கு முறைகள் இருப்பின் சமத்துவ உரிமை (Art 14 – 18) பிரிவை பயன்படுத்தி நீதியை பெறலாம்.
இது தவிர தேர்தல் முறை, நிதிநிலை தாக்கல் செய்வது, நாடாளுமன்றம் நடத்தும் முறை, ஊராட்சி நகராட்சி மாநகராட்சி செயல்கள் என நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலையை செதுக்குவதற்கு தேவையான அனைத்து அடிப்படைக் கூறுகளும் இதனுள் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் தனது புனித நூலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்று, ஒவ்வொரு நாட்டை சார்ந்தவரும் தனது நாட்டின் அரசியலமைப்பு பற்றி அறிவது முக்கியம். அரசியலமைப்பு பற்றிய அறிவு இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு கட்டாயம் தேவையான ஒன்று. போதிய முன்னுரிமை கொடுத்து கற்க முயல்வோம் நாட்டின் அர்த்தமுள்ள குடிமக்களாவோம்.
-Monish